2023 ஆம் ஆண்டுக்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ள கார்கில்ஸ் வங்கி, இந்த ஆண்டில் 30% மொத்த சொத்து அதிகரிப்பின் உந்துசக்தியுடன், வலுவான வரிக்கு முந்தைய இலாபத்தை பதிவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டில் பதிவாக்கப்பட்ட ரூ. 206 மில்லியன் வரிக்கு முந்தைய இலாபத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் ரூ. 730 மில்லியனை வங்கி பதிவாக்கியுள்ளது. மொத்த செயல்பாட்டு வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14% அதிகரித்து, ரூ. 4,875 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், 39% அதிகரிப்புடன் ரூ. 1,494 மில்லியனாக பதிவாக்கப்பட்ட தேறிய கட்டணங்கள் மற்றும் இதர வருமானத் தொகையே இதற்கு பிரதான உந்துசக்தியாக அமைந்துள்ளது. தேறிய வட்டியின் இலாப வரம்புகள் சற்று வீழ்ச்சி கண்டு 5.61% ஆக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டில் 5.99% ஆக பதிவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2023 இன் பிற்பாதியில் சரிவடைந்த வட்டி வீதச் சூழலே இதற்கான பிரதான காரணம்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த செயல்பாட்டுச் செலவுகள் 23% ஆல் அதிகரித்து, ரூ. 2,892 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், நிலையச் செலவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு மத்தியில், இதர செயல்பாட்டு செலவுகளில் ஏற்பட்ட 48% அதிகரிப்பே இதற்கு பிரதான காரணம். இதற்கிடையில், வலுக்குறைப்பு ஒதுக்கீடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% ஆல் வீழ்ச்சி கண்டு ரூ. 849 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 145% அதிகரிப்புடன் ரூ. 1,135 மில்லியன் என்ற வரிக்கு முந்தைய செயல்பாட்டு இலாபத்திற்கு வழிவகுத்துள்ளது.
வங்கியின் மொத்தப் பொறுப்புக்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31% ஆல் அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% அதிகரிப்புடன் ரூ. 50,729 மில்லியனாக பதிவாக்கப்பட்ட வைப்புக்களின் வளர்ச்சியே இதற்கு பிரதான காரணம். இதற்கிடையில், மொத்தச் சொத்துக்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30% அதிகரிப்புடன் ரூ. 69.7 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. கடன்துறையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% அதிகரிப்புடன் ரூ. 40,559 மில்லியனாகவும், நியாயமான மதிப்பீட்டின் அடிப்படையில் நிதியியல் சொத்துக்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73% அதிகரிப்பையும் பதிவாக்கியுள்ளன.
கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. செனாரத் பண்டார அவர்கள் வங்கியின் பெறுபேற்றுத்திறன் குறித்து விளக்குகையில், “எம்முடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு நிலைபேணத்தகு பெறுமதியைத் தோற்றுவித்துள்ளோம் என்பதை நாம் மிகுந்த பணிவுடன் அறியத்தருவதுடன், வங்கியின் வரலாற்றிலேயே அதிகூடிய செயல்பாட்டு இலாபமாக ரூ. 1,135 மில்லியனைப் பதிவாக்கியுள்ளதுடன், 2023 நிதியாண்டில் மொத்த சொத்துக்களில் 30% வளர்ச்சியையும் அடையப்பெற்றுள்ளோம். சுறுசுறுப்பான செயல்பாடு, இலக்கு மீதான கவனம் மற்றும் பணப்புழக்கம் மற்றும் கடன் தரம் குறித்த விவேகமான முகாமைத்துவம், விசாலமான வலையமைப்பின் பக்கபலம் மற்றும் கார்கில்ஸ் சூழல் கட்டமைப்பில் உள்ள வாய்ப்புக்கள் ஆகியன எமது பாதையை சீராக்கி, வலுப்படுத்தியுள்ளதுடன், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புக்களை தவறாது பயன்படுத்திக் கொள்வதற்கான மூலோபாய முக்கியத்துவமான ஸ்தானத்தில் வங்கியை நிலைநிறுத்தியுள்ளன.
தளம்பல் நிலவிய செயல்பாட்டு சூழலுக்கு முகங்கொடுத்தமைக்கு மத்தியிலும், கொழும்பு பங்குச் சந்தையில் தன்னை நிரற்படுத்தும் பணியை வங்கி வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதுடன், ஆரம்ப பொது வழங்கல் நடவடிக்கையின் போது வழங்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு தொகைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. இதற்கு கிடைக்கப்பெற்ற மகத்தான வரவேற்பை, பணிவுடன் ஏற்றுக்கொள்வதுடன், எமது குறிக்கோள் மற்றும் வழங்கும் ஆற்றல் மீதான எமது நம்பிக்கையையும் வலியுறுத்த விரும்புகின்றோம். பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எமது மூலதனத் தளம் ரூ. 11.9 பில்லியனாக வளர்ந்துள்ளதுடன், எமது பங்குதாரர் தளத்தில் 2,000 கூடுதல் பங்குதாரர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.
கார்கில்ஸ் வங்கி தொடர்பான விபரங்கள்
டிஜிட்டல் செயல்பாடுகளுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இலங்கையில் மிகவும் அரவணைப்புடனான வங்கியாக மாற வேண்டும் என்ற இலக்குடன், கார்கில்ஸ் வங்கியானது Fitch Ratings Lanka இடமிருந்து A(lka) கடன் தரமதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், கார்கில்ஸ் குழுமத்தின் நிதியியல் சேவைகள் பிரிவாகவும் இயங்கி வருகின்றது. இது ஒட்டுமொத்த வங்கி மற்றும் நிதிச் சேவைகளையும் வழங்கி வருகின்றது. பண வடிவிலான பரிவர்த்தனைகளுக்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நாடும் வழிமுறைகளைக் கொண்ட சமூகத்தைத் தோற்றுவிக்கும் இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோளை உள்வாங்கியுள்ள வங்கி, இலங்கையில் முதல்முதலாக Lanka QR பரிவர்த்தனைகளை வழங்கி, ஏற்றுக்கொண்ட பெருமையைச் சுமப்பதுடன், நாடளாவியரீதியில் தொழில்நுட்ப அடிப்படையிலான கொடுப்பனவுத் தீர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
கிளைகள், ஏடிஎம் மையங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கங்களுக்குப் புறம்பாக, நாடளாவியரீதியிலுள்ள கார்கில்ஸ் சில்லறை வர்த்தகமையங்கள் மூலமாகவும் கார்கில்ஸ் வங்கிக் கணக்குகளை அடைந்துகொள்ள முடிவதுடன், Cargills Cash Service என்ற சேவை மூலமாக, 470 க்கும் மேற்பட்ட கார்கில்ஸ் சில்லறை வர்த்தகமையங்களில் இலவசமாக பண வைப்புக்கள் மற்றும் பணம் மீளப்பெறும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். முழுமையான சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள், முதலீட்டுத் திட்டங்கள், கடன் மற்றும் டெபிட் அட்டைகள், நுகர்வோர் கடன்கள், விவசாய மற்றும் நுண் கடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி மற்றும் வணிக வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் வாணிப கடன் வசதிகள், திறைசேரி நடவடிக்கைகள், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவைகள் மற்றும் பல்வகைப்பட்ட நெகிழ்வுத்தன்மை கொண்ட மற்றும் சௌகரியமான டிஜிட்டல் வங்கிச்சேவைகள் போன்ற சேவைகளை கார்கில்ஸ் வங்கி வழங்கி வருவதுடன், டிஜிட்டல் வங்கிச்சேவைகள் மூலமாக முற்றிலும் சௌகரியமாக 24 மணி நேரமும் கணக்குகளை அடைந்து கொள்ள முடியும்.
கொழும்பில் கொள்ளுப்பிட்டி என்ற இடத்தில் கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளதுடன், மெயிட்லான்ட் கிரெசென்ட், மகரகமை, பழைய சோனகத்தெரு (ஓல்ட் மூர் ஸ்ட்ரீட்), வத்தளை, கண்டி, பேராதனை, நுவரெலியா, சிலாபம், கோட்டை, ராஜகிரிய, இரத்தினபுரி, தனமல்வில, மாத்தறை, காலி, குருணாகல், கருதுவெலை, வவுனியா, சுன்னாகம், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம் மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களில் கிளைகளையும் கொண்டுள்ளது. அத்துடன், கணக்கினை ஆரம்பித்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உதவிச்சேவைகள் போன்ற வங்கித் தொழிற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, தெரிவுசெய்யப்பட்ட கார்கில்ஸ் ஃபூட் சிட்டி வியாபார மையங்களில் அமைந்துள்ள 28 கார்கில்ஸ் வங்கி மினி சேவை மையங்களும் வங்கியின் வலையமைப்பிற்கு வலுச் சேர்ப்பிக்கின்றன.