Home //
Media Centre
We’re in the news.
Read all about it...
கார்கில்ஸ் வங்கி 2026 மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 105 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது
Fri, 26 Jun 2026

நிதிசார் முதன்மை அம்சங்கள்

  • இக்காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபம் ரூ. 105 மில்லியனாகக் காணப்படுகின்றது.
  • மொத்த மூலதன விகிதம் 19.01% ஆகும்.
  • நிகர கடன் ஏடு (Net loan book) 2025 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 6% இனால் (ரூ. 3.8 பில்லியன்) வளர்ச்சியடைந்து ரூ. 67 பில்லியனை எட்டியுள்ளது (ஆண்டிற்கு ஆண்டு கண்ட வளர்ச்சி 37%).
  • மொத்த கடன்களுக்குள் நிலை 3 கடன்களின் விகிதம் (நிலை 3 வேற்றுமைப்படுத்தல் நீங்கலான/net of stage 3 impairment)  6.44% ஆகும்.
  • மொத்த சொத்துக்கள் 2025 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 6% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 97.5 பில்லியனை எட்டியுள்ளன (ஆண்டிற்கு ஆண்டு கண்ட வளர்ச்சி 19%).
  • உரிமைப்பங்கு வழங்கல் (Rights Issue) மூலம் ரூ. 2.5 பில்லியன் சாதாரண மூலதனத்தை வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது.

2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான கார்கில்ஸ் வங்கியின் அடைவுகள் ரூ. 185 மில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளன. இது 2025 ஆம் ஆண்டின் ஒத்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 42% வீழ்ச்சியைக் காட்டுகின்றது. இதற்கு முக்கிய காரணம் மொத்த ஏனைய வருமானத்தில் ஏற்பட்ட ரூ. 381 மில்லியன் அளவிலான குறிப்பிடத்தக்கக் குறைபாடாகும். மொத்த ஏனைய வருமானத்தில் ஏற்பட்ட இக்குறைபாடானது நிகர வட்டி வருமானத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் மூலம் பகுதியளவில் ஈடுசெய்யப்பட்டது.

நிகர வட்டி வருமானம் ரூ. 1,041 மில்லியனாக உயர்ந்ததுடன், இது 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டை விட (Q1) 20% உயர்வாகும். நிகர வட்டி எல்லைமட்டத்தை (NIM) உகந்த முறையில் முகாமை செய்வதற்காக, சந்தை நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வைப்புக்கள் மற்றும் முற்பணங்களின் விலைகளை மீள்நிர்ணயம் செய்வதில் செலுத்தப்பட்ட மூலோபாயக் கவனத்துடன் கூடிய கடன் வளர்ச்சியானது  இவற்றுக்கு முதன்மையான உந்துசக்தியாக அமைந்தது. இது 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4.38% ஆக இருந்த நிகர வட்டி எல்லைமட்டம் (NIM), மீளாய்வுக்கு உட்பட்ட இக்காலாண்டில் 4.46% ஆக அதிகரித்ததன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.

நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் (Net fee and commission income) 2025 ஆம் ஆண்டின் ஒத்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 7 மில்லியன் என்ற சிறியளவிலான குறைவைப் பதிவு செய்துள்ளது. இந்த 3% குறைவடைதலில் செல்வாக்குச் செலுத்திய காரணங்களாக, 2025 முதலாம் காலாண்டில் கடன்கள் மற்றும் முற்பணங்களுடன் தொடர்புடைய கட்டண வருமானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த ஒருமுறைமட்டும் (one-off) ஏற்பட்ட செலவு விடயங்களினாலும், இக்காலாண்டில் வர்த்தகம் சார்ந்த கட்டண வருமானத்தில் ஏற்பட்ட சிறியளவிலான குறைவும் காணப்படுகின்றன.

இதேபோல், இக்காலப்பகுதிக்கான மொத்த ஏனைய வருமானம் 96% இனால் குறைந்து ரூ. 15 மில்லியனாகக் காணப்பட்டது. 2025 முதலாம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட நிதிச் சொத்துக்களை அங்கீகரிக்காமையின் காரணமாக ஈட்டப்பட்ட அதிக மூலதன ஆதாயங்கள் மற்றும் இலாபம் அல்லது நட்டம் ஊடான நியாயமான பெறுமதியிலான நிதிச் சொத்துக்களின் நிகர ஆதாயங்கள் ஆகியன பெருமளவில் இல்லாது போனமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

மொத்த நிருவாகச் செலவுகள் 7% இனால் அதிகரித்து ரூ. 979 மில்லியனாக உயர்ந்தன. சந்தை நிலைமைகளைப் பிரதிபலிப்பதற்கும் திறமையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இலக்கு வைக்கப்பட்ட சம்பள உயர்வுகள் மற்றும் சீராக்கல்கள் காரணமாகப் பணியாளர் செலவுகள் 15% இனால் அதிகரித்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு மேம்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் காரணமாகத் தேய்மானம் மற்றும் தவணைக்கழிவு (Depreciation and amortization) 36% இனால் வளர்ச்சியடைந்தது. வங்கியின் வருமானத்திற்கான செலவு விகிதம் (Cost-to-Income Ratio) 75% ஆகக் காணப்பட்டதுடன், இது 2025 ஆம் ஆண்டின் ஒத்த காலப்பகுதியில் இருந்த 71% இலிருந்து ஓர் அதிகரிப்பாகும்.

வங்கி தனது ஏனைய ஒருங்கிணைந்த நட்டத்தை (Other Comprehensive Loss) ரூ. 60.4 மில்லியனாகக் கணிசமாகக் குறைத்துள்ளது. இது 2025 முதலாம் காலாண்டில் ஏற்பட்ட ரூ. 307.3 மில்லியன் நட்டத்துடன் ஒப்பிடுகையில் 80% முன்னேற்றமாகும். ஏனைய ஒருங்கிணைந்த வருமானம் (OCI) ஊடான நியாயமான பெறுமதியில் அளவிடப்படும் நிதிசார் சொத்துகளின் மீதான நியாயமான குறைந்த பெறுமதி நட்டங்கள் இதற்குத் துணையாக அமைந்தன. இதன் விளைவாக, மொத்த ஒருங்கிணைந்த வருமானம் (Total Comprehensive Income) ரூ. 44.4 மில்லியனாக நேர்க்கணியமாக மாறியதுடன், இது 2025 ஆம் ஆண்டின் ஒத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 131% மீட்சியைக் காட்டுகின்றது.

செயற்பாட்டுப் பிரிவுகளில் வங்கித் தொழிற்பாட்டுப் பிரிவே (Banking segment) செயல்திறனின் முதன்மை உந்துசக்தியாக இருந்தது. இப்பிரிவின் வரிகளுக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இருந்த ரூ. 129 மில்லியனிலிருந்து ரூ. 282 மில்லியனாக உயர்ந்தது. இப்பிரிவின் நிகர வட்டி வருமானத்தில் ஏற்பட்ட 36% வளர்ச்சியானது இதற்கு ஊக்கமளித்ததுடன், அது ரூ. 944 மில்லியனை எட்டியது. திறைசேரி மற்றும் முதலீட்டுப் பிரிவானது வரிகளுக்கு முன்னரான செயற்பாட்டு இலாபமாக ரூ. 18 மில்லியனைப் பங்களித்தது. இது முந்தைய காலப்பகுதியின் உயர் தளமட்டமான (high base) ரூ. 362 மில்லியனிலிருந்து ஏற்பட்ட குறைபாடாகும். இக்குறைபாடானது, முதன்மையாக நிதிச் சொத்துக்களை அங்கீகரிக்காமையின் காரணமாக ஈட்டப்பட்ட குறைந்த மூலதன ஆதாயங்கள் மற்றும் இலாபம் அல்லது நட்டம் ஊடான நியாயமான பெறுமதியிலான நிதிச் சொத்துக்களிலிருந்து கிடைத்த குறைந்தளவு நிகர ஆதாயங்கள் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டது.

வங்கி, கடுமையான மீளாய்வு மற்றும் அறவீட்டு நடவடிக்கைகள் மூலம் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியுள்ளது. இக்காலாண்டிற்கான மொத்த வேறுபாட்டுக் கட்டணம் (Total impairment charge) ரூ. 24 மில்லியனாகும். இது 2025 முதலாம் காலாண்டில் இருந்த ரூ. 126 மில்லியன் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 102 மில்லியன் குறைவை எடுத்துக்காட்டுகின்றது.

வங்கியின் மொத்த கடன்களுக்குள் நிலை 3 கடன்களின் (நிலை 3 வேற்றுமைப்படுத்தல் நீங்கலான) விகிதம், 2025 டிசம்பரில் 6.52% ஆகவும், 2025 மார்ச்சில் 8.18% ஆகவும் இருந்த நிலையில், 2026 மார்ச் 31 அன்றையவாறு 6.44% ஆக மேம்பட்டுள்ளது. நிலை 3 ஒதுக்கீட்டுக் காப்புறுதி (Stage 3 Provision Cover) 2025 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்த 45.65% உடன் ஒப்பிடுகையில் 44.64% ஆகப் பேணப்பட்டது.

கார்கில்ஸ் வங்கி, மூலதனப் போதுமாந்தன்மை மற்றும் திரவச் சொத்து விகிதங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு உட்பட்டு மிகச் சிறப்பாகத் தொடர்ந்து பேணி வருகின்றது. மொத்த மூலதன விகிதம் 2025 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்த 17.12% இலிருந்து 19.01% ஆக முன்னேற்றம் கண்டுள்ளதுடன், இது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு பலமான தாங்கு தொகுதியாக (buffer) அமைகின்றது. திரவத்தன்மை காப்புறுதி விகிதம் (LCR) – ரூபாயில் 212.26% ஆக இருந்த அதேவேளை, எல்.சி.ஆர் (LCR) – அனைத்து நாணயங்களிலும் 192.19% ஆகக் காணப்பட்டது. அறிக்கையிடும் திகதியன்று நிகர நிலையான நிதியளிப்பு விகிதம் (NSFR) 128.51% ஆகக் காணப்பட்டது.

2026 மார்ச் 31 அன்றையவாறான வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 97.5 பில்லியனாகக் காணப்பட்டதுடன், இது 2025 டிசம்பரின் பின்னர் ரூ. 5.8 பில்லியன் அல்லது 6% அதிகரிப்பைப் பிரதிபலிக்கின்றது (2025 மார்ச் மாதத்திலிருந்து ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 19% ஆகும்). நிகர கடன் புத்தகம் ரூ. 63.1 பில்லியனிலிருந்து ரூ. 67 பில்லியன் வரை ரூ. 3.8 பில்லியன் அல்லது 6% சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது (2025 மார்ச் மாதத்திலிருந்து ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 37% ஆகும்).

அறிக்கையிடும் திகதியன்று வாடிக்கையாளர் வைப்புக்கள் 5% இனால் வளர்ச்சியடைந்து ரூ. 69.4 பில்லியனை எட்டியுள்ளன (2025 மார்ச் மாதத்திலிருந்து ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 22% ஆகும்). இது வாடிக்கையாளர்களின் உறுதியடைந்து வரும் நம்பிக்கை, வைப்புகளை வெற்றிகரமான முறையில் திரட்டிக்கொள்வதற்கான உத்திகள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை உள்வாங்குதல் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.

மீளாய்வுக்கு உட்பட்ட இக்காலாண்டில், ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தனது மூலதனத் தளத்தை மேம்படுத்துதல் மற்றும் கடன் வளர்ச்சிக்குத் துணைபுரிதல் ஆகிய நோக்கங்களுடன், சாதாரண வாக்குரிமையுடைய பங்குகளை உரிமைப்பங்கு வழங்கல் (Rights issue) செய்ததன் மூலம் வங்கி ரூ. 2.5 பில்லியன் சாதாரண மூலதனத்தை வெற்றிகரமாகத் திரட்டியுள்ளது. இந்நடவடிக்கையை நிறைவு செய்யும் முகமாக, முதலீட்டாளர்கள் வைத்த நம்பிக்கையும் உறுதியும் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றது.

 

உங்களை நாமும் அறிந்துகொள்வோம்!
cargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.
OR
Inquiry Form