நிதியியல் சிறப்பம்சங்கள்
- முதல் 6 மாதங்களுக்கான வருமான வரிக்குப் பின்னரான லாபம் – ரூபா 137 மில்லியன்
- லாபம் அல்லது நஷ்டம் மூலமாக, நியாயமான மதிப்பில் நிதிச் சொத்துக்களிலிருந்து தேறிய ஆதாயங்கள் ரூபா 83 மில்லியனால் அதிகரித்துள்ளன
- ஏனைய விரிவான வருமானம் மூலமாக, நிதிச் சொத்துக்களின் அங்கீகாரத்தை இரத்துச் செய்வதிலிருந்து தேறிய ஆதாயங்கள் ரூபா 249 மில்லியனால் அதிகரித்துள்ளன
- வங்கி தொடர்ந்தும் சிறப்பான மூலதனம் மற்றும் திரவச்சொத்து மட்டத்தில் காணப்படுகின்றது;
- மொத்த மூலதன விகிதம் (CAR) – 71%
- திரவச்சொத்து உள்ளடக்க விகிதம் – 94%
- தேறிய திரவத்தன்மை நிதியளிப்பு விகிதம் (NSFR) – 75%
- மொத்தச் சொத்துக்கள் ரூபா 1 பில்லியனால் அதிகரித்துள்ளன
2024 ஜுன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான கார்கில்ஸ் வங்கியின் பெறுபேறுகள் லாபத்திறனில் காலாண்டு-காலாண்டு அடிப்படையில் வீழ்ச்சியை பிரதிபலித்துள்ளன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட வரிக்குப் பின்னரான லாபத்துடன் ஒப்பிடுகையில், ரூபா 116 மில்லியனால் குறைவடைந்து, ரூபா 137 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியின் ஒப்பிடுகையில் ஆறு மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானம், ரூபா 49 மில்லியன் என்ற சிறிய தொகை குறைவடைதலுடன், ரூபா 1.65 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. வட்டி வீதங்களின் படிப்படியான வீழ்ச்சி மற்றும் சந்தை தளம்பல் நிலை காரணமாக தேறிய வட்டி லாபம் சற்று குறைவடைந்துள்ளது. சந்தை நிலவரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், வைப்புக்கள் மற்றும் முற்பணங்களுக்கு மீள்விலையீடு செய்வதில் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதுடன், தேறிய வட்டி இலாபத்தை அதியுச்ச நிலைமட்டத்தில் நிர்வகித்து வருகின்றது.
2024 முதல் ஆறு மாதங்களுக்கான நிகர கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம், முன்னைய ஆண்டில் பதிவாக்கப்பட்ட ரூபா 408 மில்லியனை விடவும் குறைவடைந்து, ரூபா 384 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. வர்த்தக செயல்பாடுகள் தொடர்புபட்ட கட்டணங்களின் கீழ்நோக்கிய திருத்தம், மற்றும் அட்டை தொடர்பான வர்த்தக சேவைகளிலிருந்து குறைவடைந்த தேறிய வருமானம் ஆகியனவே இந்த 6% வீழ்ச்சிக்கான பிரதான காரணம்.
மேலும், லாபம் அல்லது நஷ்டம் மூலமாக, நியாயமான மதிப்பில் நிதிச் சொத்துக்களிலிருந்து தேறிய ஆதாயங்கள், 2024 முதல் 6 மாதங்களில் ரூபா 83 மில்லியனால் அதிகரித்து, ரூபா 180 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளன. ஏனைய விரிவான வருமான மார்க்கங்கள் மூலமாக, நிதிச் சொத்துக்களின் அங்கீகாரத்தை இரத்துச் செய்வதிலிருந்து அடையப்பட்ட மூலதன ஆதாயங்கள், மீளாய்வுக்குட்படும் காலப்பகுதியில் ரூபா 249 மில்லியனால் அதிகரித்து, ரூபா 278 மில்லியனை எட்டியுள்ளது.
மொத்த தொழிற்பாட்டு செலவுகள் கடந்த ஆண்டில் 18% ஆல் அதிகரித்து, ரூபா 1.35 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளன. பிரதானமாக, அதிகரித்த வாழ்க்கைச்செலவு மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சம்பளத் திருத்தங்கள் மற்றும் நலன்புரிச் சலுகைகள் காரணமாக பணியாளர் செலவுகள் 23% ஆல் அதிகரித்துள்ளன. பிரதானமாக, பயன்பாட்டுச் செலவுகளின் அதிகரிப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப சொத்துக்களின் திருத்த மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாக ஏனைய தொழிற்பாட்டுச் செலவுகள் 17% ஆல் அதிகரித்துள்ளன.
வலுக்குறைப்பு கட்டணங்கள், 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவாக்கப்பட்ட ரூபா 440 மில்லியன் தொகையிலிருந்து, 1% ஆல் குறைவடைந்து ரூபா. 440 மில்லியன் தொகையாக பதிவாக்கப்பட்டமை, தவறுகளைக் குறைப்பதில் ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் முன்னெச்சரிக்கையுடனான நிர்வாகத்தை நிரூபித்து, அவற்றைப் பிரதிபலிக்கின்றது. கடன்படுனர்களின் நிலைமையை கவனமாக ஆய்வு செய்த பிறகு, அவசியமானதாகக் கருதப்படும் கூடுதல் வலுக்குறைப்பு ஏற்பாடுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. 2024 ஜுன் 30 இல் வங்கியின் மொத்த கடன்கள் – கட்டம் 3 கடன்கள் (Stage 3 – கட்டம் 3 தேறிய வலுக்குறைப்பு) விகிதம் 9.92% ஆக காணப்பட்டதுடன், கட்டம் 3 ஒதுக்கீட்டுக் காப்பு 46.15% ஆக காணப்பட்டது.
மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தேவைப்பாடுகளுக்கு அமைவாக வங்கி தனது மூலதன போதுமை மற்றும் திரவச் சொத்து விகிதங்களை சிறப்பாகப் பேணி வருகின்றது. மொத்த மூலதன போதுமை விகிதம் 21.71% ஆகக் காணப்பட்டதுடன், ஏனைய திரவச்சொத்து தொடர்புபட்ட விகிதங்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைப்பாட்டை விடவும் சிறப்பான மட்டங்களில் காணப்பட்டன.
முன்னைய ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2024 ஜுன் 30 இல் வங்கியின் மொத்தச் சொத்துக்கள், 4% அல்லது ரூபா 3.1 பில்லியன் தொகை அதிகரிப்புடன், ரூபா 72.8 பில்லியனாக காணப்பட்டது. நடப்பு நிலவரங்களுக்கு மத்தியில், வங்கியின் கடன் பேரேடு ரூபா 40.6 பில்லியனிலிருந்து, ரூபா 41.1 பில்லியனாக மிதமான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது. ஏனைய விரிவான வருமான வளர்ச்சி மூலமான நியாயமான மதிப்பீட்டுடன் கூடிய நிதியியல் சொத்துக்கள், 5% ஆல் வளர்ச்சி கண்டு, ரூபா 18.7 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளன. ஏனைய விரிவான வருமானத்தில் ரூபா 14 மில்லியன் என்ற மறை ஆதாயம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் வட்டி வீதங்கள் தொடர்ந்து குறைவடைந்து வருகின்றமைக்கு மத்தியிலும், வாடிக்கையாளர் வைப்புக்கள் 2023 ஆம் ஆண்டின் முடிவில் காணப்பட்ட ரூபா 50.7 பில்லியனிலிருந்து, தற்போதைய அறிக்கை வெளியீட்டு திகதியில் 3% ஆல் வளர்ச்சி கண்டு, ரூபா 52.2 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது.
வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவராக கடமையாற்றிய திரு. ரிச்சார்ட் ஈபெல் அவர்கள், மத்திய வங்கியின் நாணயச் சபையால் விடுக்கப்பட்டுள்ள, அனுமதி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான நிறுவன ஆட்சி குறித்த வங்கிச் சட்டத்திற்கு இணங்கும் வகையில் 2024 ஜுலை 02 அன்று ஓய்வு பெற்றுள்ளார். திரு. ஈபெல் அவர்கள் 2015 ஆம் ஆண்டில் நியமனம் பெற்றதைத் தொடர்ந்து வங்கியின் பணிப்பாளர் சபையில் ஒன்பது ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்துள்ளார். பணிப்பாளர் சபையின் பிரதித் தலைவராக கடமையாற்றிய அசோக பீரிஸ் அவர்கள் 2024 ஜுலை 3 முதல் அமுலுக்கு வரும் வகையில் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கார்கில்ஸ் வங்கி தொடர்பான விபரங்கள்
டிஜிட்டல் இடமளிப்பு மூலமாக இலங்கையின் மிகவும் அரவணைப்புடனான வங்கியாக மாறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகின்ற கார்கில்ஸ் வங்கி, Fitch Ratings Lanka இடமிருந்து A(lka) என்ற கடன் தரப்படுத்தலை பெற்றுள்ளது. கார்கில்ஸ் குழுமத்தின் நிதிச் சேவைகள் அங்கமாக, முழுமையான வங்கி மற்றும் நிதிச்சேவைகளை இது வழங்கி வருகின்றது. பணத்தாள் பயன்பாட்டுக்கு பதிலாக டிஜிட்டல் வழிமுறைகளைக் கைக்கொள்ளும் சமுதாயத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற வங்கியின் குறிக்கோளுக்கு அமைவாக, நாடளாவிய தொழில்நுட்ப அடிப்படையிலான கொடுப்பனவுத் தீர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
கிளைகளுக்கு புறம்பாக, ATM மையங்கள் மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவை மார்க்கங்களையும் கொண்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 475 க்கும் மேற்பட்ட கார்கில்ஸ் சில்லறை வர்த்தக மையங்கள் மூலமாகவும் கார்கில்ஸ் வங்கிக் கணக்குகளை அணுகி, கார்கில்ஸ் வங்கி முகவர் வங்கிச்சேவையின் துணையுடன் எவ்விதமான கட்டணங்களுமின்றி வாடிக்கையாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த பரந்த அடைவுமட்டம் கொண்ட மற்றும் கலப்பு வலையமைப்பு கட்டமைப்பானது இலங்கை முழுவதும் உள்ள வணிகங்களுக்கு இலகுவான நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உறுதி செய்கின்றது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளதுடன், மெயிட்லான்ட் கிறெசென்ட், மஹரகம, பழைய மூர் வீதி, வத்தளை, கண்டி, பேராதனை, நுவரெலியா, சிலாபம், கோட்டை, ராஜகிரிய, இரத்தினபுரி, தனமல்வில, மாத்தறை, காலி, குருணாகல், கதுருவல, வவுனியா, சுன்னாகம், யாழ்ப்பாணம், நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம் மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. வங்கியின் கிளை வலையமைப்பு 30 கார்கில்ஸ் வங்கி மின் சேவை மையங்களால் வலுப்படுத்தப்பட்டு, அவை தேர்ந்தெடுக்கப்பட்ட கார்கில்ஸ் ஃபுட் சிட்டி வியாபார நிலையங்களில் கணக்கொன்றை ஆரம்பித்தல் மற்றும் வாடிக்கையாளர் உதவிச் சேவை போன்ற வங்கிச் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றன.